
சென்னை : எல்லாரையும் முன்னேற்ற, சென்னை செயல்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது, சென்னை முன்னேற வேண்டும் என்பதற்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, "சென்னை சமுதாய சேவை' (சென்னை சோஷியல் சர்வீஸ்) அமைப்பு.
வயதானோர்களுக்கும் குழந்தைகளுக்கும் உதவிபுரியும், "அரவணைப்பு', படிக்க வசதி இல்லாமல் திண்டாடும் மாணவர்களுக்கு உதவி புரியும், "நாளந்தா', சென்னையில் மரங்களை அதிகப்படுத்த செயல்படும், "சுற்றுச்சூழல் பாதுகாப்பு', அவசரக் காலத்தில் ரத்தம் வேண்டுபவர்களுக்கு தானம் செய்யும், "சிவப்புத்துளி,' சென்னைக்கு அருகில் உள்ள கிராமப்புற மக்களின் வாழ்க்கையை முன்னேற்றும், "கிராமோதரன்' என சென்னை சமுதாய சேவை அமைப்பில் பல குழுக்கள் உள்ளன.
பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் சென்னைவாசிகள், 2,000 பேர், இதில் உறுப்பினர்களாக உள்ளனர். சென்னையை "பசுமை நகரமாக்க' வேண்டும் என்பது தான் இந்த அமைப்பின் முதன்மை விருப்பம். இதற்காகவே, சுற்றுச் சூழல் பாதுகாப்புக்குழு என்ற பிரிவை ஏற்படுத்தியுள்ளனர்.
குழந்தை பெயரில் மரக்கன்று: சென்னையில் எந்தப் பகுதியில் இருந்தாலும், GREEN என, டைப் செய்து, பெயர், வீட்டு முகவரி போன்றவற்றை, 98940 62532 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் போதும். மரக்கன்று இரண்டு வாரத்திற்குள் எஸ்.எம்.எஸ் அனுப்பியவரின் வீடு தேடி வரும்.அவர்களின் வீடு, அதன் சூழல், போன்றவற்றை ஆராய்ந்து, மரக்கன்றை நட்டு, பின்னர் பராமரிக்கும் முறை பற்றி விளக்குவார்கள், அந்த மரத்திற்கு அவர்களுக்கு விருப்பமான குழந்தையின் பெயரை சூட்டுவார்கள்,
""குழந்தைகளின் பெயர்களை மரங்கன்றுகளுக்கு சூட்டுவதன் மூலமாக, அந்த மரக்கன்றை தங்கள் குழந்தையைப் போலவே பராமரிப்பார்கள்'' என்கிறார்கள் சென்னை சமுதாய சேவை அமைப்பின் நிர்வாகிகள். அது மட்டுமின்றி, இந்த அமைப்பின் உறுப்பினர்களின் திருமண விழாக்களில், தாம்பூலப்பைகளுக்கு பதிலாக, மரக்கன்றுகளை வழங்கி, இயற்கை குறித்த விழிப்புணர்வு செய்கிறது.
சென்னையில் உள்ள பல்வேறு பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று, சுற்றுச்சூழல், போக்குவரத்து போன்றவை பற்றிய விழிப்புணர்வு முகாம்கள் நடத்துகிறார்கள். மேலும், சென்னையை சுற்றி உள்ள கிராமப்புற பகுதிகளுக்குச் சென்று, மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்குத் தேவையான விழிப்புணர்வு முகாம்களையும் இந்த அமைப்பினர் நடத்தி வருகின்றனர்.
""நம்மை வாழ வைக்கிற சென்னைக்கு, நாம் என்ன செய்கிறோம் என்பது தான் முக்கியம். இந்த உணர்வு எல்லோருக்குள்ளும் வந்து விட்டால், சென்னை முன்னேறி விடும். வாங்கியதை கொடுப்பது தானே நம் மரபு'' என்கிறார் சென்னை சமுதாய அமைப்பின் தலைவர் சதிஷ்குமார்.
இந்த அமைப்பில் இணைந்து பணியாற்றவும், சேவையை பயன்படுத்த விரும்புவோரும் மேலும், விவரங்களை அறிய, 98400 19007 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஒரு மணி நேரத்தில் ரத்தம் கிடைக்கும் : அவசர உதவிக்காக ரத்தம் தேவைப்படுபவர்கள், இந்த அமைப்பினருக்கு போன் செய்தால், சென்னையில் எங்கிருந்தாலும், எந்தவகை ரத்தமாக இருந்தாலும், அந்த இடத்திற்கு தேவையான அளவு ரத்தம், ஒருமணி நேரத்தில் இலவசமாக வழங்கப்படும்.
"நாளந்தா' கல்விக்குழுவின் மூலமாக வசதியற்ற ஏழைக்குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள். அந்த உதவித்தொகையின் மூலமாக படித்து, வேலைக்குச் சேர்ந்தவர்கள் பின்னர், அதே அமைப்பில் படிக்க வசதி இல்லாத, மாணவரை படிக்க வைக்க வேண்டும் என்பது பொது விதி.
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, வாரம் ஒரு முறை உதவி செய்கிறார்கள். பாடம் படித்துக்காட்டுவது, பாடங்களை டேப் செய்து கொடுப்பது போன்ற வேலைகளுடன் தேர்வின் பொழுது "ஸ்கிரைப்'ஆக செயல்படுகிறார்கள்.
பொதுமக்கள் தங்களது வீட்டு விசேஷங்களில், வீணாகும் உணவுப் பொருட்களை இவர்களுக்குத் தெரியப்படுத்தினால், சம்பவ இடத்திற்கே வந்து, அந்தப் பொருட்களை வாங்கி, சென்னையில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அளிக்கின்றனர். இதே போல் உடைகளையும் வாங்கி, உடை வாங்குவதற்கு வசதியில்லாதவர்களுக்கு கொடுத்து வருகின்றனர்.
நன்றி : தினமலர்.com